கொரோனா பாதிப்பு கைமீறிவிட்டதா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், கொரோனா எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை எனவும் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்