மிரட்டும் ரேபிஸ்; அதில் கூட அலட்சியம் வேண்டாம் - மாநகராட்சி தீவிர நடவடிக்கை!
வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வெறி நாய்க்கடி
சென்னை ராயபுரத்தில் ரேபிஸ் நோயால் பாதித்த வெறிநாய் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்ததில், 29 பேர் பாதிக்கப்பட்டனர். அச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் 93,000 நாய்கள் இருக்கும் என கருதப்பட்டு தெருக்களில் உள்ள நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்குவதற்கான மருந்து செலுத்தும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி திட்டம்
தற்போது இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு வாடகை வாகனத்துடன் கால்நடை மருத்துவர் ஒருவர், நாய் பிடிக்கும் பணியாளர்கள் நால்வர், உதவியாளர்கள் இருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட தெரு நாய்களுக்கு வண்ண சாயம் பூசப்பட்டு அதே இடத்தில் மீண்டும் விடப்படும்.
120 நாட்கள் இப்பணிகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னார்வலர்களும் இதில் இணைந்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.