பஞ்சாப் போட்டியில் குயின்டன் டிகாக் செய்த எதிர்பாராத சம்பவம்... திகைத்து நின்ற ரசிகர்கள்...
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் குயிண்டன் டிகாக் செய்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் பேட் செய்த பஞ்சாப் அணியில் ஜானி பேர்ஸ்டோ 32, மயங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்தாலும் பிற பேட்ஸ்மேன்கள் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே லக்னோ அணியின் இன்னிங்ஸின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டத்தின் 13வது ஓவரை சந்தீப் ஷர்மா வீச குயின்டன் டிகாக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த ஓவரின் 4வது பந்தை டி காக் அடித்த பந்து எட்ஜாகி கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவின் கைகளுக்குள் சென்றது. இதற்கு பவுலர் மற்றும் கீப்பர் மிக உறுதியாக அவுட் எனக் கூறினர்.
ஆனால் எதையுமே ஏற்காத நடுவர், டிகாக்கிற்கு நாட் அவுட் என முடிவை அறிவித்தார். ஆனால் தான் அவுட் தான் என்பதை தெரிந்த டிகாக் நியாயமாக நடந்துக்கொள்ளும் வகையில் திடீரென களத்தில் இருந்து வெளியேறினார். இதனை கண்டு நடுவர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களுமே வியந்து பாராட்டினர்.
இத்தனைக்கும் 37 பந்துகளை சந்தித்திருந்த டிகாக் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை அடித்தார். அவர் நிலைத்து நின்றிருந்தால் ஸ்கோரை உயர்த்திருக்கலாம். ஆனால் உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்றால் அது இதுதான் என ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.