திடீரென ஓய்வை அறிவித்த மிக முக்கிய தென்னாப்பிரிக்க வீரர்: என்ன காரணம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரரான குயிண்டன் டிகாக் திடீரென ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் கொண்டாடி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.
அதாவது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், மிக முக்கிய வீரரான குயிண்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து முதலில் விலகுவதாக இருந்த அவர், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வு பெற்றுள்ளார்.
29 வயது மட்டுமே ஆகும் டிகாக் ஏன் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில் அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓய்வு முடிவை நான் எளிதாக எடுத்துவிடவில்லை. நீண்ட காலமாக யோசித்து, எதிர்காலத்தை மனதில் வைத்துதான் முடிவெடுத்தேன். எனக்கு முதலில் எனது குடும்பம் தான் முக்கியம். மனைவி ஷாஷா மற்றும் விரைவில் பிறக்கவிருக்கும் குழந்தைக்காகவும் இனி வரும் நாட்களை செலவிட நினைக்கிறேன்.
எனக்கு எனது குடும்பம் தான் எல்லாமே. எனவே அவர்களுக்காக நேரங்களை ஒதுக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் இருக்க இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன். இது கிரிக்கெட்டில் என்னுடைய முடிவு அல்ல. நான் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான குயிண்டன் டிகாக் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 3,300 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும். குறைந்த வயதிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்திருப்பதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.