பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ராணி எலிசபெத்
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று நல்லடக்கம்
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து விரைந்த வண்ணம் உள்ளனர்.
2-ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் உலக நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள், மன்னர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.