‘உலகின் பெரிய கிரேட் ஸ்டார் வைரத்தை திருப்பி கொடுங்கள்...’ - இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்
உலகின் பெரிய கிரேட் ஸ்டார் வைரத்தை திருப்பி கொடுங்கள் என்று இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.
இதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். ராணி எலிசபெத்தின் நல்லடக்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்
இந்நிலையில், இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் முன்வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.
1905-ம் ஆண்டு, தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்திலிருந்து வைரம் எடுக்கப்பட்டது. பிறகு, காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் பின்னர் அரச செங்கோலில் பதிக்கப்பட்டது.
உலகின் மிக பெரிய, 530.2 காரட் கொண்ட நீர் துளி வடிவிலான இந்த வைரம், சிலுவையுடன் கூடிய செங்கோலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் மறைவையடுத்து, இந்த கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தம் என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்ஆப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் உயோல்வெது ஜுங்குலா என்பது தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கிலாந்து செய்து தீங்கு அனைத்திற்கும் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவையுள்ளது. பிரிட்டனால் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்கம், வைரங்கள் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.