ராணி எலிசெபத் மறைவு ; வரும் 11ம் தேதி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவையொட்டி வரும் 11ம் தேதி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தொடங்கியது 'ஆபரேஷன் யூனிகார்ன்'
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் யூனிகார்ன் என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். நேற்று இறந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது.
அரை கம்பத்தில் அந்நாட்டு கொடி
ராணி 2ம் எலிசபெத் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் என 4 பேர் இருக்கின்றனர். ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுள்ளார்.
துக்கம் அனுசரிப்பு
பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் மறைவையொட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அன்றைய தினம் இந்திய தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
