கொரோனா போன்ற கடினமான சூழ்நிலையில் கை கொடுத்தது குவாட் அமைப்பு : பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi
By Irumporai May 24, 2022 04:34 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடக்கிறது.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு சென்றார். தலைநகர் டோக்கியோவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டோக்கியோவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், 4 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின.

தடுப்பூசி வினியோகம், பருவகால செயல்முறை, இடர்பாடுகளில் இருந்து மீண்டெழும் திறன், பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பரஸ்பர ஒருங்கிணைப்பு அதிகரித்திருந்தது.

இதனால், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திர தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டது என கூறியுள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமரான அந்தோணி அல்பேனீசுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார்.

பதவியேற்று 24 மணிநேரத்தில் எங்களுடன் இந்த உச்சி மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டுள்ளது குவாட் நட்புறவின் வலிமையை அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.