சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்துவிற்கு தங்கம்
இந்தியாவில் நடைபெறக் கூடிய சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் இந்தாண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது.
இந்த தொடரில் தனி மகளிர் பிரிவில் ஆரம்பம் முதலே பி.வி.சிந்து அதிரடி காட்டி வந்தார்.
அந்த வகையில் அரையிறுதிச் சுற்றில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான எவ்ஜெனியா கோஸட்க்யா மோதவிருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியில் விலகினார்.
இதன்மூலம் ஆடாமலேயே பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்தியாயாவை மூன்று செட்களில் போராடி தோற்கடித்தார்.
இச்சூழலில் லக்னோவில் இன்று பி.வி.சிந்துவுக்கும் மாளவிகா பண்டோட்டுக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே அதிரடியைக் கையாண்ட சிந்து மாளவிகாவை நிலைகுலைய செய்தார்.
முதல் செட்டில் 21-13 என்ற கணக்கில் மிக எளிதாக வென்றார். 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் சையத் மோடி பட்டத்தை தட்டிப் பறித்துள்ளார்.
இரண்டாம் செட்டில் ஓரளவு தாக்குப்பிடித்த மாளவிகா 16 புள்ளிகளைப் பெற்றார். இருப்பினும் அவரால் சிந்துவின் அமர்க்களமான ஆட்டத்தை தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இதன்மூலம் 21-16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டி வரை முன்னேறிய மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவி ஆவார். இரண்டாமாண்டு பி.டெக். படித்து வருகிறார். 2021-ம் ஆண்டில் உகாண்டாவில் நடைபெற்ற பேட்மிண்டன் தொடரில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.