சுய தனிமைப்படுத்தி கொண்ட ரஷ்ய அதிபர்: மீண்டும் கொரோனா?

தன்னுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரஷ்ய அதிபர் தன்னை தானே சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

உலக அளவில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை ரஷ்யாவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுதும் ரஷ்யாவில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினசரி பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வி எனும் தடுப்பூசி கண்டறியப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆனாலும், ரஷ்யாவில் தற்போதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்து கொண்டுள்ளார்.

மேலும், இவர் தஜிகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், அவரது சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உடல் நல்ல நிலையில் உள்ளதாகவும், அதிபர் புதின் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்