பார்லிமென்ட் தேர்தல்: அதிபர் விளாடிமிர் புடின் கட்சி வெற்றி
ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.ரஷ்ய பார்லிமென்ட்டில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கீழவையில் மொத்தமுள்ள 450 இடங்களில், 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 225 இடங்களுக்கு கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (செப்., 20) எண்ணப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.
இதற்கு அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.இந்நிலையில், நாடாளுமன்ற கீழவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
அதிபர் புதினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு புதின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷியா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக ரஷ்யாவில் பார்க்கப்படுகிறது.