'அதிகாரத்தை கையில் எடுங்கள்' - உக்ரைன் ராணுவத்தினரை அழைத்த அதிபர் புதின்
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

நேற்று முதல் தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்த நிலையில் உக்ரைனில் நிலைமை படுமோசமாக உள்ளது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
இதனிடையே உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் இந்த போர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு காணப்பட வாய்ப்புள்ளது.