10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு : ரஷ்ய அதிபர் அறிவிக்க காரணம் என்ன?
ரஷ்யாவில் 10-க்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதின் அறிவிப்பு
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக புது அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருக்கிறார்.

அதன்படி, 10 அல்லது அதற்கு அதிகமான குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மதர் ஹீரோயின் (Mother Heroine) என்ற கெளரவ பட்டத்துடன் 13,500 பவுண்ட் (இந்திய மதிப்பில் 13 லட்சம்) கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
13 லட்சம் பரிசு
இந்த விருதை 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும் என புதின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். மேலும் தகுதி பெற்ற தாய்மார்கள் தங்களின் 10ஆவது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இந்த பரிசுத் தொகை கிடைக்கும்.
போர், தீவிரவாத நடவடிக்கை, உடல் நலக்குறைவு, அவசர சூழ்நிலை காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அறிவித்த திட்டம்
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ரஷ்யா அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

முதன்முதலில் 1944ஆம் ஆண்டு மதர் ஹீரோயின் கெளரவ பட்டம் வழங்குவது அமல்படுத்தப்பட்டது. இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் மதர் ஹீரோயின் என்ற கெளரவ வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் 1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் இந்த பட்டம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவை தடுக்க புதின் மீட்டும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.