புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா? - எம்எல்ஏவுக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்
புத்தாநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை வைத்த MLA
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ளது புத்தாநத்தம் இந்த பகுதியைச் சுற்றிலும் சுமார் 100 சுற்றுவட்டார கிராமங்கள் இருந்து வருகின்றது.
இக்கிராமங்களில் வசிக்க கூடிய மக்கள் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் அருகில் இருக்கும் புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது.
இன்று சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் 100 கிராமங்கள் உள்ளன இங்குள்ள மக்கள் மேல் சிகிச்சைக்காக 13 கி.மீ மணப்பாறைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது எனவே வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தி தரப்படுமா? புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
விளக்கம் கொடுத்த அமைச்சர்
அப்போது அதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மணப்பாறையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையே வந்திருக்கிறது.
அதுமட்டுமல்ல ஏற்கனவே பல கட்டிடங்களை திறந்து வைப்பதற்கு நானும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும் அவருடைய தொகுதிக்கு சென்று கட்டிடங்களை திறந்து வைத்திருக்கிறோம்.
புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்துவதை காட்டிலும், கூடுதல் கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.