கொடநாடு வழக்கு - பூங்குன்றனிடம் 2ம் நாளாக தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
கடந்த 2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டது.
சசிகலாவிடம் 2 நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் துருவி, துருவி கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியானது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்தவர் பூங்குன்றன். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை சந்திக்க வருபவர்களை இவர் தான் அனுமதித்து வந்தார். கொடநாடு எஸ்டேட் பற்றி நன்கு அறிந்தவர்களில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த பூங்குன்றனும் ஒருவர். மேலும், ஜெயலலிதா கொடநாடு செல்லும் போது இவரும் உடன் சென்று வருவார்.
இந்நிலையில், சசிகலாவைத் தொடர்ந்து நேற்று கோயம்புத்தூரில் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொடநாட்டில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது யார்? சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாடு என பல கேள்விகளை கேட்டு பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் 2ம் நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.