பிரபல பாடகர் சுட்டுக்கொலை... பஞ்சாபில் உச்சக்கட்ட பதற்றம்... திட்டமிட்டு நடந்த சதி
பஞ்சாபின் பிரபல பாடகரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான சித்து மூஸ் வாலா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பாடகரான சித்து மூஸ் வாலா அங்குள்ள கிராமப்புறங்களில் மிகவும் பிரபல பாடகர் ஆவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸில் சேர்ந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் தேர்தலில் மான்சா மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனிடையே மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஜீப் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். சித்துவை நோக்கி சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஞ்சாப்பில் விஐபி கலாச்சாரத்தை குறைக்கும் பொருட்டு முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420க்கும் மேற்பட்டவர்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.