திடீரென வழுக்கையான கிராம மக்களின் தலை - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கிராம மக்களுக்கு திடீரென முடி கொட்டியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
திடீரென முடி கொட்டுதல்
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திடீரென முடி கொட்ட தொடங்கியுள்ளது.
இதில் பலரும் தங்களது தலையை மொட்டையடித்து கொண்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஒன்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டது.
மாதிரிகள் சேகரிப்பு
குடிநீரில் கண உலோகங்கள் கலந்திருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என சந்தேகித்த மாவட்ட நிர்வாகம், தற்போதுள்ள குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என்றும், மாற்றுகுடிநீரை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தது.
இதனிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஆகியவற்றின் குழுக்கள் அந்த கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வில் ஈடுபட்டன.
அதே போல், மருத்துவர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் அங்கு பாதிக்கப்பட்டவர்களின், ரத்த, சிறுநீர், முடி மாதிரிகள் அவர்கள் பயன்படுத்தும் கோதுமை மற்றும் அந்த பகுதியில் உள்ள நீர், மண், ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினார்.
வெளிமாநில கோதுமை
ஆய்வு முடிவில் அந்த பகுதி மக்கள் பயன்படுத்திய கோதுமையே இந்த முடி உதிர்வுக்கு காரணம் என தெரிவித்துள்ளார். அந்த மக்களின் இரத்தம் சிறுநீர் மற்றும் முடியின் மாதிரிகளில் சாதாரண அளவை விட 1000 மடங்கு அதிக செலினியம் இருப்பது தெரியவந்துள்ளது.
உள்ளூரில் விளைவிக்கப்படும் கோதுமையில் செலினியம் சாதாரண அளவில் இருந்ததாகவும், உள்ளூர் ரேஷன் கடைகளுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து பெறப்பட்டுள்ள கோதுமையில் செலினியம் 600 மடங்கு அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வெளிப்புற இமயமலையில் உள்ள சிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளின் பாறைகளில் செலினியம் வளமாக இருப்பதாகவும், அந்த பகுதியில் விளைவிக்கப்படும் கோதுமைகள் செலினியதை உறிஞ்சி வளர்கின்றன என மருத்துவர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
600 மடங்கு செலினியம்
செலினியம் என்பது தண்ணீரிலும் சில உணவுகளிலும் காணப்படும் ஒரு கனிமமாகும். மக்களுக்கு மிகக் குறைந்த அளவு மட்டுமே தேவைப்பட்டாலும், இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
செலினியத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு, குழந்தைகளுக்கு 20 மைக்ரோகிராம், பெரியவர்களுக்கு 55 மைக்ரோகிராம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு 60-70 மைக்ரோகிராம் ஆகும். 400 மைக்ரோகிராம் வரை உடல் பொறுத்துக்கொள்ளும், அதற்கு அதிகமானால் பக்க விளைவுகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திய கோதுமையில் 600 மடங்கு அதிக செலினியம் இருந்துள்ளது.
இதனால் கொத்துக்கொத்தாக முடி கொட்டியதோடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, உச்சந்தலையில் அரிப்பு, கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது.
அதன்பிறகு முடி கொட்டுதல் சில நாட்களில் நின்று, சில வாரங்களில் முடி வளர தொடங்கியது. ஆனால் இந்த பாதிப்பால் பல மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல மறுத்தனர். பல நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போனது.