``நான் உயிருடன் விமான நிலையமாவது வந்துசேர்ந்தேன். பஞ்சாப் முதல்வருக்கு நன்றி!" - பிரதமர் மோடி

prime minister narendra modi punjab visit farmers block road
By Swetha Subash Jan 05, 2022 01:34 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபின் பெரோஷாபூரில் இன்றுகாலை நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதாக இருந்தது. இதனால் காலையில் பிரதமர் மோடி விமானம் மூலம் பதிந்தா விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

பின்னர், அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெரோஷாபூர் செல்வதாக இருந்தது. காலையில் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து மழை பெய்து கொண்டிருந்தது.

அதனால், சிறிது நேரம் விமானநிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி காத்திருந்தார். ஆனால், 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தும் வானிலை சரியாகததால் சாலை மார்க்கமாக செல்ல முடிவுசெய்தார்.

சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தால் இரண்டு மணி நேரம் ஆகும். அப்படியிருந்தும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த பிறகு சாலை மார்க்கமாகவே செல்ல முடிவு செய்யப்பட்டது.

அப்போது, சாலை மார்க்கமாக சென்ற போது நடுவழியில் விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடத்துக்கும் மேல் நிறுத்தப்பட்டது.

அப்படியிருந்தும் போக்குவரத்து சரியாகவில்லை.

பிரதமர் சாலை மார்க்கமாக செல்லும் போது மாநில போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என பஞ்சாப் மாநில டி.ஜி.பி-யிடம் மத்திய உள்துறை அமைச்சகம் முன்னதாகவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியிருந்தும் விவசாயிகள் போராட்டத்தால் பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. இதனால் பயணத்தை மேற்கொண்டு தொடராமல் பிரதமர் மோடி மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பிவிட்டார்.

பாதுகாப்பு குளறுபடி குறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருக்கிறது.

மேலும் பெரோஷாபூரில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு கூடியிருந்த பொதுமக்களும் நீண்ட நேரம் அமர்ந்திருந்துவிட்டு, மழை காரணமாக எழுந்து சென்றனர்.

பிரதமர் மோடி பஞ்சாபில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தது. முதலில் அவர் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார்.

இந்த பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி நட்டா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிகாரிகளிடம், ``நான் உயிருடன் விமான நிலையமாவது வந்துசேர்ந்தேன். பஞ்சாப் முதல்வருக்கு நன்றி!" என்று சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.