பஞ்சாபில் தத்தளிக்கும் காங்கிரஸ் - அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சித்து பொறுப்பேற்றார். முதலமைச்சர் அமரிந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி சித்துக்கு பதவி வழங்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். இந்த நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சித்து தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்கிரஸில் இருந்து பணி புரிய விரும்புவதாக சோனியா காந்திக்கு சித்து கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து மாநில அமைச்சர் ரசியா சுல்தானாவும், மாநில காங்கிரஸ் பொது செயலாளர் யோகிந்தர் திங்ராவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி என்னசெய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது.