நடிகர் புனீத்தின் கண்களால் 4 பேருக்கு பார்வை - இறந்தும் வாழ்வதாக குடும்பத்தினர் கண்ணீர்

Family Donate Crying Eye Puneeth Rajkumar
By Thahir Nov 01, 2021 12:38 PM GMT
Report

கர்நாடக மாநிலத்தில், கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் அவரின் இரண்டு கண்கள் தானமளிக்கப்பட்டது.

அவரின் கண்களால் 4 பேருக்கு தற்போது பார்வை கிடைத்துள்ளது. அதுவும் ஒரே நாளில் நான்கு பேருக்கு கண்களைப் பொறுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டு கண்களைக் கொண்டு நான்கு பேருக்கு கண்பார்வை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமாரின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில், இந்த அறுவை சிகிச்சைகள் மருத்துவமனை சார்பில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று நாராயணா நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் புஜங் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

புனீத் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்ற இடிபோன்ற செய்தியைத் தாங்கிக் கொண்டு, அவரது குடும்பத்தினர், கண்களை தானமளிக்க முன்வந்தனர்.

புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மாவின் கண்களும் முறையே 2006 மற்றும் 2017ல் தானமளிக்கப்பட்டது.

பெற்றோரின் வழியைப் பின்பற்றி புனீத் ராஜ்குமாரின் கண்களும் தானமளிக்கப்பட்டன. அவர் இறந்த வெள்ளிக்கிழமையன்று அப்புவின் கண்களை தானமாகப் பெற்றோம். மறுநாள், அவை கண்பார்வை இல்லாத நான்கு பேருக்கு தானமளிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்திலேயே முதல் முறையாக, புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டு கண்கள் நான்கு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது கருவிழியை இரண்டு துண்டுகளாக்கி, முதல் பாதி ஒருவருக்கும், மற்றொரு பாதி இரண்டாமவருக்கும் பொருத்தப்பட்டது. இதுபோல நான்கு பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது.

வழக்கமாக தானம் பெறுவோர் மிகச் சரியாகக் கிடைப்பது சவாலாக இருக்கும். ஆனால் இம்முறை எல்லாமே தானாகவே அமைந்துவிட்டது.

ஒருவரது கண்விழி மிக நல்ல முறையில் இருந்தால் அதன் மூலம் நான்கு பேருக்கு கண்தானம் அளிக்கலாம். நான்கு பேரும் தற்போது நன்றாக இருக்கிறார்கள்.

அதே வேளையில் புனீத் ராஜ்குமாரின் கண்களின் வெள்ளைப் பகுதியும் எடுக்கப்பட்டு, அவை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிலிருக்கும் லிம்பெல் செல்கள் வளர்க்கப்பட்டு, அவை தீக்காயம் உள்ளிட்டவற்றால் கண்விழி பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்பாக தீபாவளி வேளையில் இது பலருக்கும் பயன்படும் என்று டாக்டர் ஷெட்டி கூறியுள்ளார். புனீத்தின் கண்களை தானம் பெற்றவர்கள் அனைவருமே கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.

நான்கு அறுவை சிகிச்சைகளும் ஒன்றன் பின் ஒன்றாக சனிக்கிழமை முற்பகல் 11.30க்குத் தொடங்கி, மாலை 5.30 மணி வரை நடைபெற்றது என்றும் கூறினார்.

அவரின் கண்கள் பொறுத்தப்பட்டு 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர் வாழும் போதும் உதவிய புனீத் மறைந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.