புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு பின் கண் தானம் செய்ய படையெடுக்கும் மக்கள்
கர்நாடகாவில் நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு பின் கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர் புஜங் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி காலமானார்.அவரின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி கன்னட மக்களை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரின் மறைவு செய்தியை தாங்க முடியாமல் இது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் 7 பேர் தற்கொலையும் 3 பேர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து புனீத் ராஜ்குமாரின் மூத்த சகோதரர்கள் சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் இதுபோன்று யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என எரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் பொதுசேவையில் அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவர்.ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் விடியலை கொண்டு வந்தவர்.
திரையுலகம் மட்டுமின்றி பொது வாழ்விலும் அன்பாக நடந்து கொண்டவராக வலம் வந்தார். அவர் தனது மறைவுக்குப் பிறகு தனது கண்களை தானமாக வழங்க உறுதியளித்திருந்தார்.அதே போன்று அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
அவரது கண்களார் 4 பேர் கண் பார்வை பெற்றுள்ளனர்.மேலும் அவர் அனைவரையும் உடல் உறுப்பு தானம் வழங்க வலியுறுத்தி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது மறைவை அடுத்து தற்கொலை செய்து கொண்ட அவரது ரசிகர்கள் தங்களது கண்களை தானமாக வழங்கியிருக்கின்றனர்.
நாராயண நேத்ராலயாவின் தலைவர் டாக்டர் புஜங் ஷெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், புனீத்தின் கண் தானத்திற்குப் பிறகு மக்கள் கண் தானம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
முன்பு எல்லாம் 50 முதல் 100 பேர் தான் தங்கள் கண்களை தானமாக வழங்கி வந்தார்கள்,ஆனால் தற்போது கடந்து நான்கு நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் கண் தானம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்த 4 நாட்களில் 28 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது.ஒரு நாளில் 1 அல்லது 2 கண்களைப் பெறுவது கடினம், குறிப்பாக கோவிட் சூழ்நிலையில்.
ஆனால் நன்கொடைகளின் எண்ணிக்கையில் இந்த திடீர் அதிகரிப்பு ஒரு சாதனையாகும்," என்று அவர் கூறினார். மேலும், இதய சிறப்பு மருத்துவமனைகளில் மக்கள் தங்கள் இதயத்தை பரிசோதிக்க விரும்பம் தெரிவிப்பதாகவும்,
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு புனித் ராஜ்குமார் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்ததாக வதந்திகள் பரவி வருவதால், விடுமுறை நாட்களிலும் மக்கள், குறிப்பாக ஜிம்முக்கு செல்பவர்கள் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சி என் மஞ்சுநாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
இதயத்தை பரிசோதிக்க இளைஞர்கள் ஆர்வமாக மருத்துவமனைக்கு வருகின்றனர். பொதுவாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், எங்கள் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்படும்.
ஆனால் அவசர சிகிச்சை பிரிவு செயல்படும். விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக 150 வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு அரசு விடுமுறை நாட்களில் மட்டும் 550 வெளி நோயாளிகள் பரிசோதனை மேற்கொள்ள வந்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர் 25 இருந்து 30 சதவீதம் ஜிம்மிற்கு செல்வோர்க்கு தான் இந்த மாரடைப்பு ஏற்படுகிறது.அதிலும் அவர்கள் இளைஞர்கள் என கவலை தெரிவித்துள்ளார்.