பொய் காரணம் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய பெண் - அலுவலகத்தில் சக ஊழியர் செய்த கொடூரம்
பெண் ஒருவர் சக ஊழியரிடம் பொய்யான காரணம் கூறி பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
பணம் வாங்கியது
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் எரவாடா பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், 28 வயதான சுப்தா ஷகர் காதர் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.
இவர் அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரான கிருஷ்ணா கனோஜா(30) என்பவரிடம், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.
பொய் காரணம்
கிருஷ்ணா, அவரிடம் ஒவ்வொரு முறையும் பணத்தை திரும்ப கேட்கும்போதும், தந்தைக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை என்றும், சிகிச்சைக்கு இன்னும் அதிக பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி பணத்தை திருப்பியளிக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, சுப்தாவின் ஊருக்குச் சென்ற கிருஷ்ணா அவரைப் பற்றி விசாரித்துள்ளார். மேலும் அவரின் தந்தைக்கு எந்த உடல்நலக் குறைபாடும் இல்லையென்றும், நலமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தன்னிடம் பொய்யான காரணத்தை கூறி பணம் வாங்கியுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த கிருஷ்ணா, நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் சுப்தாவை அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
கொலை
அப்போது கிருஷ்ணா பணத்தை திரும்பக் கேட்ட போது தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்தாவை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிகிச்சைக்காக அருகே உள்ளே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணா அந்த பெண்ணை தாக்கிய போது சக ஊழியர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாவை கைது செய்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.