ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாணப்படுத்தி பூஜை - சிக்கிய கணவர் குடும்பம்
மகாராஷ்ட்ராவில் ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாணப்படுத்தி கணவர் குடும்பத்தினர் பூஜை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் நாம் நூற்றாண்டுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் கண்டாலும் மூடநம்பிக்கைகள் இன்னும் சமூகத்தை பின்னோக்கி தான் கொண்டு செல்கிறது. அப்படியான சம்பவம் மகாராஷ்ட்ராவில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சக்கன் காவல்நிலையத்தில் தனது கணவர், மாமியார் மற்றும் சாமியார் ஒருவர் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து பெண் குழந்தை இருப்பதாகவும், ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து சித்ரவதை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் குழந்தை பிறக்காததால் சாமியார் ஒருவரிடம் கணவரும் மாமியாரும் அழைத்துச் சென்ற போது, அந்த சாமியார் சாம்பலை சாப்பிட வைத்ததாகவும் கொஞ்சம் சாம்பலை வீட்டுக்கு கொடுத்தனுப்பி நிர்வாணப்படுத்தி சாம்பல் பூஜை நடத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய கணவர் குடும்பத்தினர் தன்னை நிர்வாணப்படுத்தி சாம்பலையும், குங்குமத்தையும் உடம் முழுக்க பூசிவிட்டனர் என்றும், என் அனுமதி இல்லாமலே ஆண் குழந்தை இல்லை என்பதற்காக வேறு ஒரு பெண்ணையும் என் கணவர் ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார் என்றும் அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து கணவர், அவரின் தாயார் மற்றும் சம்பந்தப்பட்ட சாமியார் ஆகியோர் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர். கைது செய்து விசாரித்து வருகின்றனர்.