குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த ஜித்து என்ற அசோக் சுரவேஸ். மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதில், ஜித்து தனக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன்பின்னர் தன்னுடைய அந்தரங்க படத்தை எடுத்துவைத்து மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு திருமணம் என்று தெரிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டில் இந்தப் படங்களை காட்டி திருமணத்தை நிறுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஜித்து பல பெண்களை ஏமாற்றியுள்ள திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி அவர் பல பெண்களுடன் பழகி அவர்களை தனியாக அழைத்து சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், பெண்களை நிர்வாண படம் எடுத்து அதை வைத்து மீண்டும் அவர்களை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஜித்து தன்னுடைய இடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தி வந்த மொபைல் எண்களையும் அடிக்கடி மாற்றி வந்துள்ளார். முதலில் மகாராஷ்டிராவில் இருந்து ஜித்து கர்நாடகா சென்றதாகவும் அதன்பின்னர் கடைசியாக கோவாவில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய கோவாவிற்கு விரைந்த புனே காவல்துறையினர் தனிப்படை உதவியுடன் ஜித்துவை கைது செய்தனர். கோவாவிலிருந்து அவரை தற்போது புனே அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
குளிபானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து இளைஞர் ஒருவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.