மனைவியை வீட்டுக்குள் வைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன் - அதிர்ச்சி சம்பவம்

By Petchi Avudaiappan May 16, 2022 07:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஹைதராபாத்தில் மனைவியை வீட்டு அறைக்குள் வைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவனால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 200 க்கும் மேற்பட்ட ஸ்வீட் கடைகளை நடத்தி வரும் ராகவாரெட்டி என்பவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளார். 

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு ரூ.75 லட்சம் ரொக்க பணம், ரூ.9.5 லட்சம் மதிப்பில் தங்க வெள்ளி நகைகள், ரூ.35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் ஆகியவை தவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. 

மொத்தம் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை ராகவாரெட்டி குடும்பத்தினர் பேரம் பேசி பெற்றதாக கூறப்படுகிறது. இதைத்தவிர வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதனை பிரகன்யா குடும்பத்தினர் செய்யவில்லை. 

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  ஏக் நாத் ரெட்டி கூடுதல் வரதட்சனை கேட்டு தராத தனது மனைவியை விவாகரத்து செய்ய முயன்றுள்ளார். அந்த விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால் மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏக்நாத்துக்கு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த மே 10 ஆ,ம் தேதி வீட்டின் கீழ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருக்கும் அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

இருவரையும் சிறைவைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியேற விடாமல் தடுப்புச்சுவர் ஒன்றை கட்டியுள்ளார். தான்  சிறைவைக்கப்படுள்ள தகவலை தனது பெற்றோருக்கு பிரகன்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசாருடன் ஏக்நாத் ரெட்டியின் வீட்டிற்கு விரைந்த பிரகன்யாவின் பெற்றோர் அந்த தடுப்பு சுவற்றை உடைத்து இருவரையும் மீட்டனர்.

மேலும் மே 10 ஆம் தேதி தனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து தன்னை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றதாகவும் பிரகன்யா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முயன்றால் தனது மகளையும், பெற்றோரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பிரகன்யா புகாரின் அடிப்படையில் போலீசார் அவரது கணவர் மற்றும் மாமியார் மீது பல வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.