நியூசிலாந்து தொடரில் இடம்பெறும் இளம் வீரர் - நம்பிக்கையான செய்தி சொன்ன சீனியர் வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில்லுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என மூத்த வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இதனிடையே இந்த டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசி வரும் மூத்த வீரரான புஜாரா சுப்மன் கில்லிற்கு ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சுப்மன் கில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற தகவலை என்னால் தற்போது வெளியிட முடியாது என்றும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சுப்மன் கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.