புதுக்கோட்டை தேர் விபத்து - காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணம்!
புதுக்கோட்டையில், கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000 நிவாரணம் அறிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
தேர் விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் தேருக்கு அருகில் நின்ற 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணம் அறிவிப்பு
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேர் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் ஊழியர்களான ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகியோர் மீது சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு தலா ரூ.50000 நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.