வீடியோ கேமால் வந்த வினை - மனஉளைச்சலில் பொறியியல் பட்டதாரி தற்கொலை
புதுச்சேரியில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியர் பட்டதாரியான இவரது மகன் தீபக் கடந்த ஆண்டு கொரோனா காலத்துக்கு பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடி வந்துள்ளார்.
அதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமானது. மேலும் வீட்டின் இரண்டாவது மாடியில் அவருக்கென தனியாக அறை இருந்தது. அந்த அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போன், கேம் விளையாட தேவையான அனைத்து வசதிகளும் செய்திருந்தார்.
தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாடி வந்த சூழலில் நேற்று இரவு தீபக் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே தீபக் அதிக பதற்றத்துடன் இருந்துள்ளார். அத்துடன் அதிக கோபத்துடன் டென்ஷனாக இருப்பதால் யாரும் தன்னிடம் பேசவேண்டாம் என்றும் தெரிவித்தார். அவரது அறையில் கணினி, மொபைல் கேம் விளையாடும் வகையில் அனைத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.
மொபைல்போன், விடியோ கேம் தொடர்ச்சியாக அதிகநேரம் விளையாடியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் விரக்தியாகி தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.