தமிழிசை சவுந்தர்ராஜன் உத்தரவால் புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ்!
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.
அந்த சமயம் பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த கிரண் பேடியை நீக்கம் செய்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை துணை நிலை ஆளுநராக நியமித்து, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை உத்தரவால், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக இருந்த துணை ராணுவ பாதுகாப்பு படையும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஆளுநர் மளிகை சுற்றி பல சாலைகளில் இருந்த முள்வேலி கம்பிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
மேலும் தமிழிசை உத்தரவால் பாரதியார் சிலை உள்ள பாரதி சதுக்கம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.