பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை - காதலனை தாக்கிவிட்டு 3 பேர் செய்த கொடூரம்
3 பேர் கொண்ட கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
கடந்த மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகம்
இந்நிலையில், இதேபோல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வட மாநிலத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஒருவர், விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
மேலும் அங்கு பயின்று வரும் சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
3 பேர் கும்பல்
அப்போது திடீரெனஅங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது மாணவி அவர்களிடம் தப்பியோட முயற்சித்துள்ளார்.
இந்த கும்பல் மாணவியை விரட்டிய போது கீழே விழுந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க பயந்த மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்த மூவரில் ஒருவர் கல்லூரியின் தற்காலிக ஊழியர் என தெரிய வந்துள்ளது. மற்ற இருவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.