ஹிஜாப் அணிந்த மாணவியை அனுமதிக்காத தலைமையாசிரியர் : நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் மனு
புதுச்சேரியில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை அனுமதிக்காத பள்ளி தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சமூக அமைப்பினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதற்கு தலைமையாசிரியர் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் கடந்த 4-ஆம் தேதி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதற்கு பள்ளி தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பள்ளி மாணவியின் தந்தை இக்பால் பாட்ஷா சமூக அமைப்புகளுடன் சேர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சியிடம் பேசியுள்ள அப்பள்ளியின் தலைமையாசிரியர் கோமதி
எங்கள் பள்ளியில் நிறைய இஸ்லாமிய மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் புர்கா அணிந்து வருவார்கள் ஆனால் பள்ளி வகுப்பறைக்குள் புர்கா அணிந்து வரமாட்டார்கள்.
ஆனால் மாணவி கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து வகுப்பறைக்குள் புர்கா அணிந்தபடியே பயின்று வருவதாக கூறிய அவர், மாணவர்கள் அனைவரும் ஒரே சீருடையில் இருந்து மாறுப்பட கூடாது என்பதற்காக தான் மறுத்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.