புதுச்சேரியில் அரசு பெரும்பான்மையை இழந்தது: என்ன நடக்கும்?
புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன்மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சையின்(மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது.
இதேபோல் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.