விஜய்யை திடீரென சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நிறைவடைந்த நிலையில் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடுகிறது. ஏனென்றால் கடந்த அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் வென்றனர்.
இது பல அரசியல் கட்சிகளின் சராசரியை விட அதிகமாகும். கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ள போதிலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தது அதுவே முதல்முறையாகும்.
இதனைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கியுள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்.
வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரத்தைத் தொடங்க உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசினார். இந்த தேர்தலின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் மரியாதை நிமித்தமாக விஜய்யை சந்தித்துள்ளதாக ரங்கசாமி தரப்பு தெரிவித்துள்ளது.