கடலுக்கடியில் வெளியிடப்பட்ட சினிமா போஸ்டர் - இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்
இயக்குநர் ஹரி - நடிகர் அருண் விஜய் இணைந்துள்ள ’யானை’ படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரகனி, ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், யானை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய்யின் ரசிகர்கள் வித்தியாசமாக படகில் சென்று நடக்கடலில் ஆக்சிஜனுடன் குதித்து வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.