செல்போனில் கேம் விளையாடியதால் தாய் கண்டிப்பு - விரக்தியில் மாணவன் எடுத்த திடீர் முடிவு!
புதுச்சேரியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாமல், செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, ஜீவானந்தபுரத்தை சேர்ந்த மார்ட்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி எலிசபெத். அவர்களது 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படிக்கும் எலிசபெத்தின் இரண்டாவது மகன் நிக்கோலஸ் அவ்வப்போது தாயின் செல்போனை எடுத்து சென்று ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளாமல் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேற்று இரவும் மாணவன் நிக்கோலஸ் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை கண்டதும் ஆத்திரமடைந்த எலிசபெத் செல்போனை தரையில் உடைத்தார்.
இதில், மனம் உடைந்து மாணவன் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தாயார் அக்கம் பக்கதினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மாணவன் தனது தாயின் புடவையை எடுத்து மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.