புதுச்சேரியில் திமுக தனித்து போட்டி? திமுக காங்கிரஸ் மத்தியிலான உறவு முறிகிறது!

political tamilnadu dmk relationship
By Jon Jan 18, 2021 06:27 PM GMT
Report

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கட்சி அல்லாத கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் வேட்பாளராக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன், புதுச்சேரி சட்ட மன்றத்திற்கான தேர்தலும் நடைபெறுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, தி.மு.க., காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு விட்டு தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை களம் இறக்க திட்டம் தீட்டியுள்ளது தி.மு.க. இதற்கிடையே, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சுப்பிரமணியத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று தெரிவித்து தி.மு.க மற்றும் பா.ஜ.கவுடன் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நமச்சிவாயம் கடந்த வாரம் டில்லியில் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை சந்தித்து பேசியுள்ளார், அவர் பா.ஜ.கவில் இணைவது உறுதியாகி உள்ளதாகவும் தெரிகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜான் குமார் தி.மு.கவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்களை தனக்கு சாதமாக்கி ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் தி.மு.க இறங்கியுள்ளது. இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரி நிர்வாகிகள் கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தி.மு.க தனித்து ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, விவசாய மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இன்று கூட்டப்பட்ட புதுச்சேரி சட்டசபை கூட்டத்தை தி.மு.க புறகணித்துள்ளது.

இதனால், புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். தி.மு.க தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான கூட்டணி அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வீரப்ப மெய்லியின் இந்தப் பேச்சு தி.மு.கவை கொதிப்படைய செய்துள்ளது.

இதனால் தமிழகத்திலும், காங்கிரஸ் கட்சியை கழற்றி விடும் யோசனையில் தி.மு.க உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.கவிடம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்துள்ள நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ்க்கு ஏற்பட்டுள்ள நிலை தான் தமிழகத்திலும் ஏற்படும் என எதிர்பார்க்கலாம் , புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள நிலை தமிழக அரசியலிலும் பிரதிபலுக்குமா ? அல்லது புதுச்சேரியில் எடுத்த இந்த முடிவின் மூலம், தமிழிக காங்கிரஸ்க்கு சமிக்ஞைகளை அனுப்புகிறதா திமுக?