புதுச்சேரி காங்கிரசிலும் உட்கட்சி பூசல் .. என்ன நடக்கிறது.?
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முடிவிற்கு வந்தன. ஆனாலும் சலசலப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. 40 தொகுதிகள் கேட்ட காங்கிரசுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. அதற்கும் வேட்பாளர் தேர்வில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் காட்சிகள் இவ்வாறு இருக்க புதுச்சேரியிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாராயணசாமி அரசு கவிழ்க்கப்பட்டதில் இருந்தே அங்கு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவிற்கு பதின்மூன்று இடங்களும் காங்கிரசுக்கு பதினைந்து இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று வேட்பாளர் தேர்வுக்காக நடைபெற்ற கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்பட்டன. அதோடு புதுச்சேரியில் திமுகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.