புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சீல்.!
தமிழகத்தோடு சேர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் நாராயணசாமி அரசு கவிழ்ந்த பிறகு புதுச்சேரி அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. திமுக - காங்கிரஸ் மீண்டும் கூட்டணியாக தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.
மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க இருப்பதாக பேச்சுகக்ள் அடிபட்டன. ஆனால் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பாஜக தயங்குவதாகவும் இதனால் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. நேற்று என்.ஆர். காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று முக்கிய முடிவு எதிர்பார்க்கபட இருந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணியாக தேர்தலைச் சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும் அதிமுக - பாஜக 14 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரங்கசாமி தலைமையில் இந்த தேர்தலைச் சந்திக்கிறோம் என பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் ரங்கசாமியே முதல்வர் வேட்பாளராக இருப்பார் எனத் தெரிகிறது.