தொகுதி பங்கீட்டில் இழுபறி.. முதல்வர் வேட்பாளர் குழப்பம் - புதுவையில் பாஜக என்னதான் செய்கிறது?
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததிலிருந்து அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரியும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிஸ், பாஜக, அதிமுக கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டது. ரங்கசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக் தனித்தே தேர்தலைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது இந்நிலையில் புதுச்சேரி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி உடையும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனியார் நட்சத்திர விடுதியில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று மாலை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைப் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சாரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
10 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் நிர்மல் குமார் சுரானா வெளியே வந்தனர்.
இதுகுறித்து மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், "என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். ஆனால் இதுபற்றி ரங்கசாமி ஏதும் பேசவில்லை