இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000 - புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்
தமிழக பெண்கள்தான் இந்தியாவிலே டாப் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
புதுமை பெண் திட்டம்
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதே போல் பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில், 2022ம் ஆண்டு செப்டம்பர்மாதம் புதுமை பெண் திட்டத்தை தொடங்கியது.
அரசு உதவி பெரும் பள்ளி
வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தரும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு கல்லூரி படிப்பை முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் 75,028 மாணவிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு பெண்கள்
இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(30.12.2024) தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த விழாவில் உள்ள மாணவிகளைப் பார்த்து திராவிடியன் ஸ்டாக்காக பெருமைப்படுகிறேன். இதற்கு நேர் எதிராக பெண்கள் வளர்ச்சி பிடிக்காமல் வன்மம் பிடித்த ஸ்டாக் ஒன்று உள்ளது. பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் Expiryயான ஸ்டாக்.
மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார்.
தந்தையின் கடமை
பணமில்லாமல் படிப்பை நிறுத்திய பல்லாயிர மாணவிகள் கல்லூரிகளை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். உங்களுக்கு படிப்புக்கு மட்டுமல்ல எந்த தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். முந்தைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் நிதி நெருக்கடி ஒரு பக்கம், ஒத்துழைப்பு தராத ஒன்றிய அரசு ஒரு பக்கம் என சிக்கல்கள் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கினோம்.
ஒரு ஆண், கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஆனால் ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி.உயர்கல்வி பெறாத பெண்கள் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன். படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள்.
உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்திட நம்முடைய அரசு இருக்கிறது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 4.75 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர் . இதற்கு 590 கோடி ரூபாய் செலவு . இதனை ஒரு தந்தையின் கடமையாக, பெண் கல்விக்கு மூலதனமாக நினைக்கிறேன்:" என பேசினார்.