உதட்டளவில் மட்டுமே மக்கள் சேவை: கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்
உதட்டளவிலும் உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்து வருபவர் நடிகர் கமலஹாசன் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் துக்கடா அரசியல்வாதி என மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகா லே-அவுட் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், தான் இதுவரை மக்களுக்கான சேவைகளை மட்டுமே செய்து வருகிறேன் எனவும், தன்னால் தொகுதி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் மத்திய மாநில அரசுகளிடம் பேசி கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.
நேற்று கட்சி துவங்கிய கமலஹாசன் பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் செய்ய வேண்டுமா எனவும் உலகிலேயே பெரிய கட்சி பாஜக எனவும் கூறியதுடன், தன்னை துக்கடா அரசியல்வாதி என்று கூறிய கமல்ஹாசன் இதுவரை மக்களுக்கு என்ன சேவை செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுவரை அவர் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்ததாகவும் உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே சேவை செய்து வந்தவர் கமலஹாசன் என்றும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.