இந்தியாவில் உருமாறிய புது வகை கொரோனா ; மக்கள் பதட்டமடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் தளர்வுகளை அறிவித்தது.
மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திரும்பவும் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரானின் புதிய வகையான துணை திரிபான எக்ஸ்.இ. வகைத் தொற்று மும்பையில் ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் சுகாதாரம் குறித்த மணற்சிற்பங்களை வரையும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்,
“ எக்ஸ்.இ (XE) வகை கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. அறிகுறி இருந்தால் அருகில் உள்ள பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 3.2 லட்சத்திலிருந்து 3.8 லட்சம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என எண்ணக்கூடாது, இன்றளவும் 20 - 30 பாதிப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட வேண்டாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.
மற்றபடி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் என கூறவில்லை. RNA வைரஸ் உருமாறுவது வழக்கம். இதனால் பதட்டமடைய வேண்டாம்.
பாதுகாப்பாக இருக்க வேண்டும். விழிப்புணர்வில் மாற்றம் வேண்டாம் என்று கருதினால் தான் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியும். கவனக் குறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.