ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி அன்று பொது விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளன்று பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த வருடம் அம்பேத்கர் பிறந்த நாளை அரசு விடுமுறையாக மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
அன்றைய தினத்தில் மத்திய அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய பொது விடுமுறையாக அறிவித்த மத்திய அரசு, தற்போது அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பு ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதால் ஏற்கெனவே பொது விடுமுறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், பொருளாதாரம், நீதித் துறை, அரசியல் என பன்முக திறமை கொண்டவராக விளங்கினார். இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்த அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மறைந்தார்.
இவரைச் சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1990ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.