வாக்குச்சாவடியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளைபெற்றால் கிராம வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. பொதுமக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்த வாக்குச்சாவடிக்கு வருகை தந்த சில வயதானவர்களை வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். தேர்தல் விதிப்படி பார்த்தால் வாகனத்தை வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில் தான் நிறுத்த வேண்டும்.
ஆனால் வாகனத்தில் வந்தவர்கள் வாக்குச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் போலீஸார் அவர்களை கண்டித்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். இதனால் சுமார் ஒருமணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது குறிப்பிடத்தக்கது.