தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி 5 சவரனா? 6 சவரனா? பொதுமக்கள் குழப்பம்
ஆட்சி மாற்றத்தால், கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது 6 சவரன் வரையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில தங்க நகைகளை அடமானம் வைத்து பலரும் கடன் வாங்குகின்றனர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். இது, அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன்வரை அடகு வைத்து பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என பிப்., 26ல், சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வரான இ.பி.எஸ். தெரிவித்தார். அன்று மாலையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன. இதனால், நகைக்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
அந்த விபரம் தெரியாமல் அடமானம் வைத்தவர்கள் தங்களின் நகைகளை திரும்ப வழங்க கோரி,வங்கிகளுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்.
இதனால், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ். சட்டசபையில் அறிவித்த 6 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது தி.மு.க.வின் வாக்குறுதியான 5 சவரன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற குழப்பம் பலரிடமும் எழுந்துள்ளது.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கூட்டுறவு வங்கிகளில், நடப்பாண்டு ஜன., வரை, 5 சவரன் வரையும், 6 சவரன் வரையும் வழங்கப்பட்ட கடன் நிலுவை விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. புதிய அரசு, எந்த அளவிலான நகை கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிடுகிறதோ, அதை செயல்படுத்துவதற்கான பணி விரைந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.