அதிகாரிகளைக் கண்டித்து தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்
தூத்துக்குடியில் அதிகாரிகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மீளவிட்டான், ராஜீவ் நகர், பாக்கியலட்சுமி நகர் பகுதிகளில 244 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 1997 முதல் மீளவிட்டான் பஞ்சாயத்திலும், பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியிலும் வீட்டுத் தீர்வை, மின்கட்டணம், தண்ணீர் வரி செலுத்தி வருகின்றனர். குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அழைக்கழித்து வருவதாக குற்றம்சாட்டி ராஜீவ் நகர், பாக்கியலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் எட்வின் ராஜா, பொருளாளர் குரூஸ் அந்தோணி ஆகியோர் தலைமையில் ராஜீவ் நகரில் உள்ள மண்டபத்தில் 1350பேர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்தும் மக்களுக்கு உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.