போலிஸாரை கும்பலாக தாக்கிய பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு!
மது பானம் விற்ற நபரை பிடிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாருக்கு சரமாரி அடி. வீடியோ வெளியானதால் பரபரப்பு..10 பேர் கைது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணப் பெருமாள். இவர் ஓட்டேரி பிரிக்கிளின் சாலை சந்திப்பு பகுதியில் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் 500 ரூபாய் கொடுத்து மது பானம் தரும்படி கேட்டுள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட அந்த நபர் மதுபானம் இல்லை என்று கூறி அவரை விரட்டி விட்டுள்ளார். அதன் பிறகு வந்தவர்களுக்கு கள்ளச் சந்தையில் மதுபானம் விற்க்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரவண பெருமாள் மீண்டும் சென்று அந்த நபரிடம் மதுபானம் தரும்படி கேட்டு உள்ளனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் சரவண பெருமாளை அடித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். சரவண பெருமாள் இது குறித்து அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஓட்டேரி சப் இன்ஸ்பெக்டர் சஜிபாவிடம் தெரிவித்தார். உடனே ஷஜிபா சம்பவ இடத்திற்கு சென்று சரவண பெருமாளிடம் பணம் கொடுத்து மீண்டும் சென்று மதுபானம் வாங்க சொல்லி உள்ளார்.
அப்போது மதுபானம் விற்ற சேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது அவரை அவரது வீடு உள்ள பகுதியான எஸ்.எஸ் புரம் 6 வது தெருவிற்கு அழைத்துச் சென்று அவரது வீட்டை சோதனை செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த காஞ்சனா, சசிகலா, மணிகண்டன், சந்தோஷ் உள்ளிட்ட சிலர் சப் இன்ஸ்பெக்டர் சஜிபாவை தாக்கியுள்ளனர். இது குறித்து சஜிபா உடனடியாக உதவி ஆய்வாளர் மணிவண்ணனை தொலை பேசியில் அழைத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மணிவண்ணன் மற்றும் போலீசார் சங்கர் ஆகிய இருவரையும் அங்கிருந்த பெண்கள் உட்பட பலரும் தாக்கியுள்ளனர். இதனால் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அங்கிருந்து தப்பித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 போலீசாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.