பப்ஜி மதன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: குற்றவாளியாக மதனின் மனைவியும் சேர்ப்பு
பப்ஜி மதன் வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் பெண்கள் குறித்த அருவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசி தனது யூ ட்யூப் சேனல்களில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசார், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதில், ஊரடங்கில் பலருக்கும் உதவி செய்வதாக கூறி 2,848 நபர்களிடம் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக மதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதனின் மனைவியை 2வது குற்றவாளியாக சேர்த்துள்ள போலீசார், இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.