பப்ஜி மதன் மீதான குண்டர் சட்ட வழக்கில் தமிழக அரசு,சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 'பப்ஜி' மதன் தொடர்ந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், 'எனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. நான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு.
எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், எனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் எனக்கு முறையாக வழங்கப்படவில்லை.எனவே, தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,'எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஐகோர்ட் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதன் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு,
சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.