ஜிஎஸ்டி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது.
அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும் என்று தெரிவித்தனர்.

உச்ச நீதிமனறத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டியில் முழு மாற்றங்கள் தேவை என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிதுரை மாநில சட்டமன்றங்களை கட்டுப்படுத்தாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.